சனி, 4 ஆகஸ்ட், 2012

சோதனை டிப்ஸ்கள் (6-8-2012 முதல் 10-8-12)நிப்டி இந்த வாரம் : வியாபரம் ஆகும் ரேஞ்ச்கள் : 5123 முதல் 5316 வரை
சந்தை இறங்கவேண்டிய தருணத்தில் மாறாக ஏறுமுகம் காட்டுகிறது.
ஆனால் அதிக கொள்முதல் காரணமாக சரிவு நேரலாம் (4850 வரை)
5125 முதல் 5277 வரை இருக்கும் லெவல்கள் பாதுக்காப்பாக இருக்கும்
லாங் செல்பவர்கள் 5176 ஸ்டாப் லாஸ் ஆக கொள்ளலாம் .

 மொத்தத்தில் மதில் மேல் பூனையாகவே இருக்கும் 

 பேங்க் நிப்டி : 10261 க்கு கீழ் சென்றால் சந்தை பெரிய சரிவை சந்திக்க கூடும் என நம்புகிறேன் ..

ஜடி நிப்டி : 5878 க்கு மேல் செல்ல வாய்பு இருக்கும் என தோன்றவில்லை .

ஜாக்பாட் பங்குகள்(PHK UP)
KRBL
BURANBUR
DcW

வாங்க பரிந்துக்கும் பங்குகள் தற்போதைய விலை எதிர்பார்க்கும் விலை ஸ்டாப் லாஸ்
TV 18(ZL DOWN)
MTNL
UNITECH (BUY 20 RS)
BLKASYAP (ZL UP)

RISKEY BUY : (MA UP)
DCW
KSERASERA
IOLN (RADER O.P) T . 3.5AFTEK
ALOKTEXT

விற்க பரிந்துக்கும் பங்குகள் தற்போதைய விலை எதிர்பார்க்கும் விலை ஸ்டாப் லாஸ்
VIMTALABS (PDIP UP)
UGAR SUGER
SJVN

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

பங்கு சந்தை ஓர் அறிமுகம்

பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆவலா! மேலும் உங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விருப்பமா? இப்பகுதியில் பங்கு சந்தை மற்றும் பங்கு வர்த்தகம் பற்றிய அடிப்படை விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சிகொள்கிறோம்! இ-வணிக உலாவிகள் பங்கு சந்தை பற்றிய தங்கள் அறிவை பெருக்கிகொள்வதே இப்பகுதியின் நோக்கமாகும்!


பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - முன்னுரை

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருந்தது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றல் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.

அப்படி பட்ட ஒரு அலசலை நாம் இந்த தொடரில் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த தொடரில் அது பற்றி அலசலாம்.

பங்கு சந்தை பற்றி பேச போகிறோம் என்றதும் இது ஒரு டெக்னிக்கல் சம்பந்த பட்ட ஒரு விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். அடிப்படையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.

ஆக நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை பங்கு சந்தை. பங்கு சந்தை என்றால் பங்குகளை விற்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். "பங்கு" என்றால் என்ன

பங்கு என்றால் என்ன?

ஒரு தொழில் நடத்த முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரே செய்தால் அவரை உரிமையாளர் என்கிறோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் லாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதை "Proprietorship" என்கிறோம். அதே முதலீட்டைஇரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து செய்தல் லாப நஷ்டங்கள் அதனை பங்குதாரரையும் சேரும். இதை "Partnership" என்கிறோம்.
மேலே சொன்ன முறையில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கஷ்டமான காரியம். உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆக நிறய முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதுக்கு பணத்தை நிறைய பேரிடம் முதலீடாக வாங்கி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்க படுகிறது. அப்படி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்கும் போது, முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு என்பது.
சரி ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கிவிட்டோம் (எப்படி பங்கு வாங்கலாம் என்பது பற்றி அப்புறம் எழுதுகிறேன்). நமக்கு பணம் தேவை படும் போது அந்த பங்குகளை விற்க நினைக்கிறோம் என்றால் யாரிடம் விற்பது? இதற்காத உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனம் நம்மிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்காது. ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.
இப்படி பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வாங்கிய பணத்தை வைத்து கம்பெனியை நிர்வாகம் செய்வது யார்? proprietorhsip என்றால் முதலாளியாக இருக்கும் நபர் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். Partnership என்றால் Partners நிர்வாகத்தை கவனித்து கொள்வார்கள். கம்பனியில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே கம்பனி நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். கம்பனியை நிர்வகிக்கும் நபர்களை Board of Directors என்று சொல்கிறோம். கம்பனியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் கம்பனியில் அதிக ஷேர் வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் (சத்யம் ராஜு மாதிரி) .
ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அல்லது அதன் விருவாக்கதிற்கு பணம் தேவை படும் போது ஷேர் வெளியிடும். அப்படி வெளியிடப்படும் ஷேர்களை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம். ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது அதை IPO (Initial Public Offer) என்கிறோம்.
கம்பனி ஷேர் வெளியிடும் போது நம்மால் வாங்க முடியவில்லை என்றால், அதே கம்பனி பங்குகளை நாம் எப்படி வாங்குவது? இங்குதான் பங்கு சந்தை என்னும் இடம் தேவைப்படுகிறது. ஆக நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்கவோ அல்லது ஒரு கம்பனி நல்ல நிலையில் செயல்படுகிறது என்று முடிவு செய்து அந்த கம்பனியில் பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றாலோ நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் கம்பனிக்கு போய் சேராது. அது பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். கம்பனிக்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த கம்பனியில் முதலீடு செய்தால் எப்போ வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் கம்பனியை ஆரம்பிதவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.
பங்குகளை வாங்குவது விற்பது எப்படி, பங்குகளை தெரிவு (select) செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

பங்குகள் - வாங்குவதும் விற்பதும்
ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) கொடுக்கும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் (share certificate number) இருக்கும். ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (shareholders register) வைத்திருக்கும். அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை இப்படி அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.
பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்றால், அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் அவரிடமிருந்து பங்கு வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடப்பட்ட பங்கு பத்திரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதன் பிறதுதான் புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும். மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை.
இப்போதும் நிறுவனம் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது, ஆனால் பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "Dematerialization" என்று அழைக்கப்படும்"Demat" முறை வந்து விட்டது. இந்த முறைப்படி, பங்கு அச்சடிக்கும் வேலை எல்லாம் இல்லை. எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் Demat account என்று சொல்லப்படும் Demat கணக்கை தொடங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு முறை புரோக்கரை தொடர்பு கொண்டு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தோமென்றால் நம் பெயருக்கு Demat accountதொடங்கப்படும். Demat account தொடங்கிய பின் நம்முடைய Demat ஐ வைத்து கணினி மூலமாக நாமே நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இங்கே நாம் நேரிடையாக என்று குறிப்பிடுவது புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் ஒரு வித செயல்பாட்டின் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.
"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். நாம் Demat account ஆரம்பித்த பின், நம்முடைய Demat மூலமாக மும்பை பங்கு சந்தை என்று சொல்லப்படும் BSE மற்றும் தேசிய பங்கு சந்தை என்று சொல்லப்படும் NSE ஆகிய இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கி இரண்டே நாளில் நம்முடைய Demat-ல் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். Demat என்பது நம்முடைய வங்கி கணக்கு மாதிரிதான். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால், நம் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் Demat-ம். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய Demat கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
ஆக இன்றைய சூழ்நிலையில் Demat இருந்தால்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Demat account எப்படி ஆரம்பிப்பது? Demt ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு பங்கு புரோக்கரை அணுக வேண்டும். உதாரணமாக ICICI, Kotaksecurities, Indiainfoline, Indiabulls இப்படி நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டால் Demat ஆரம்பிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே முடித்து தருவார்கள். நாம் ஒரு புரோக்கரிடம் Demat ஆரம்பித்தால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே..! நாம் Demat ஆரம்பித்தால் வருடா வருடம் Demat கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் வசூலிப்பார்கள். இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை நாம் அந்த Demat மூலமாக பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வாங்கிய அல்லது விற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நம்மிடம் புரோக்கர் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணங்கள் ஒவ்வொரு புரோக்கருக்கும் மாறுபடும். அதனால் Demat ஆரம்பிக்கும் முன் கட்டண விஷயங்களை விசாரித்துப் பார்த்து அதன் பிறகு எந்த புரோக்கர் என்று முடிவு செய்து Demat ஆரம்பிப்பது நல்லது.

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி?

முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.
பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.
1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்
1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) : ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) : இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.
3. தின வர்த்தகம் (Day trading): இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.
நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில்trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!! பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று சொல்லப்படுகிறது.
இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை

பங்கு வியாபாரத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பங்கு வியாபாரத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

லாப நஷ்ட கணக்கு என்பது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு விற்பனை செய்திருக்கிறது, என்னென்ன செலவுகள் செய்திருக்கிறது மொத லாபம் என்ன, நிகர லாபம் என்ன போன்ற விஷயங்களை கொண்டிருக்கும். வழக்கமாக லாப நஷ்ட கணக்கு வருடத்திற்கு ஒருமுறை அதாவது 12 மதங்களுக்கான கணக்காக இருக்கும். பங்கு சந்தையில் பதிவு செயயப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்திர கணக்கை பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் லாப நஷ்ட கணக்கை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு ஒரு விதிமுறை பங்குசந்தையில் இருக்க காரணம் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
லாப நஷ்ட கணக்கு எனபது அந்த நிறுவனத்தில் லாப நஷ்டத்தை பற்றிய குறிப்பு என்றால் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) என்பது குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நிறுவனத்தின் சொத்து எவ்வளவு, அந்த நிறுவனத்தின் பொறுப்பு அல்லது அந்த நிறுவனம் கொண்டிருக்கும் கடன்கள் எவ்வளவு என்பதை குறிக்கும் ஒரு statement. ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் நிறுவனம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும். உதாரணமாக 2007-2008 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.௨008 தேதியிட்டு சமர்பிக்க பட்டிருக்கும். அதேபோல் 2008-2009 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 31.03.2009 தேதியிட்டு சமர்பிக்கப்படும். இந்த இரண்டு நிதிநிலை அறிக்கைக்கும் இடைப்பட்ட 12 மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிப்பதுதான் லாப நஷ்ட கணக்கு. இதுமட்டுமின்றி பணம் எந்த வழியில் வந்தது அது எப்படி எல்லாம் செலவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் அடங்கிய ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதை Cash Flow statement என்று அழைக்கிறோம். ஆக, நிறுவனம் 3 விதமான அறிக்கைகள் சமர்பிக்கிறது.
1. லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account)
2. நிதிநிலை அறிக்கை (Balance Sheet)
3. Cash Flow Statement
முதலில் லாப நஷ்ட கணக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்பதை பார்ப்போம். ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபம் சம்பதிததா அலல்து நஷ்டமடைந்திருக்கிறதா என்பதை குறிக்கும். நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.
1. Sales
2. Operating Expenses
3. Operating Profit (1-2)
4. Other Income
5. NPBDIT (Net Profit Before Depreciation, Interest and Tax) (3+4)
6. Interest
7. NPBDT (Net Profit Before Depreciation and Tax) (5-6)
8 . Depreciation
9. NPBT (Net Profit Before Tax) (7-8)
10. Extra-ordinary items - Profit / Loss
11. NPBT (Net Profit Before Tax - post extra-ordinary items) (9 and 10)
12. Tax 13. NPAT (Net Profit After Tax)/Reported Net Profit (11-12)
14. Earning per Share (EPS)
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? முதலில் இந்த நிறுவனம் லாபத்தில் இருக்கிறதா அலல்து நஷ்டத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வரிசை எண் 13-ஐ பார்க்க வேண்டும், இந்தி பார்த்தால் நமக்கு அந்த நிறுவனம் எவ்வளவு நிகர லாபம் சம்பாதித்திருக்கிறது என்று தெரியும். ஆனால் இதை மட்டுமே வைத்து, லாபத்தில் இருக்கிற ஒரே காரணத்திற்காக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா என்றால் சரி என்று சொல்வதற்கு முன் இன்னும் நிறைய விஷயங்களை பார்க்க வேண்டும். எந்த ஒரு நிறுவனத்தின் லாபத்தை பற்றி நாம் ஒரு கணிப்புக்கு வர வேண்டும் என்றால் ஒரு வருட லாபத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய கூடாது. மேலும் நிகர லாபத்தை மட்டும் பார்ப்பதை விட Operating Profit ஐ பார்க்க வேண்டும். operating Profit என்றால் என்ன? அந்த நிறுவனம் செய்யும் விற்பனையில் செலவுகளை கழித்த பிறது வரும் லாபத்தை operating Profit என்கிறோம். தேய்மானம், வட்டி மற்றும் வருமானவரி போன்றவற்றை கழிக்கும் முன் இருக்கும் லாபம்தான் Operating Profit. குறைந்தபட்சம் மூன்று வருட லாப நஷ்ட கணக்கை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவ்வாறு ஒப்பிடும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? அந்த நிறுவனத்தின் விற்பனை (sales) வருட வருடம் கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் ஒரு நிறுவனம் என்பது வருடா வருடம் வளர வேண்டும். வளர்ச்சி என்பது விற்பனையில் தெரிய வரும். விற்பனை கூடுகிறதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு கூடும் விற்பனை லாபத்தை கூட்டுகிறதா என்று கவனக்க வேண்டும். விற்பனை கூடினால் லாபம் கூடத்தானே வேண்டும் என்று நமக்கு தோணலாம். ஆனால் சில நிறுவனங்கள் விற்பனையை கூட்டினாலும் விற்பனை விகிதத்தை விட செலவு விகிதம் கூடி இருந்தால் லாபத்தை பாதிக்கும்.
உதாரணமாக சென்ற வருட விற்பனையில் 80% செலவு ஆகி இருக்கிறது என்றால் விற்பனையில் 20% லாபமாக இருக்கும். அதே நிறுவனம் இந்த ஆண்டு விற்பனையை இரண்டு மடங்காத கூட்டி இருக்கிறது என்றால், லாபமும் இரண்டு மடங்காக கூடி இருக்க வேண்டும். கீழே இருக்கும் உதாரணத்தை பார்த்தால் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.
Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40
Year 2
1. Sales 400
2. Operating Expenses 350
3. Operating Profit (1-2) 50
மேலே இருக்கும் உதாரணத்தில், நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டில் லாபம் கூடி இருக்கிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது தெரியும். ஆனால் இந்த நிறுவனம் உன்ன்மையிலேயே லாபத்தை கூட்டி இருக்கிறதா? இந்த நிறுவனம் முதலாண்டு Rs.200 விற்பனை செய்து Rs.40 ஐ வருமானமாக அடைந்திருக்கிறது. அதாவது விற்பனையில் 20% லாபம் (40/200x100). இரண்டாம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை Rs.400 ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விற்பனை உயர்ந்திருப்பதால் அந்தன் லாபமும் கூட வேண்டும். லாபம் Rs.50 ஆக இருக்கிறது. அதாவது உயர்ந்திருக்கிறது - ஆனால் இந்த நிறுவனம் முதலாண்டை விட இரண்டாம் ஆண்டில் சரிவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் அப்படி? முதலாம் ஆண்டில் விற்பனையில் 20% லாபமாக சம்பாதித்த நிறுவனம் இரண்டாம் ஆண்டில் அதே அளவு விகிதத்தில் Rs.80 லாபமாக சம்பாதித்திருக்க வேண்டும் (Rs.400 x 20% = Rs.80), ஆனால் Rs.50 மட்டுமே லாபம் சம்பதிதிருக்கிறது. ஏன் இடந்த வித்தியாசம்? செலவு அதிதமாகி இருக்கிறது. முதலாண்டில் Rs.200 க்கு Rs.160 செலவு என்றால் இரண்டாம் ஆண்டு விற்பனை இரண்டு மடங்கு ஆகும்போது செலவும் இரண்டு மடங்காகி Rs.320 தான் இருக்க வேண்டும், ஆனால் செலவு Rs.350 ஆக உயர்ந்திருக்கிறது. செலவில் Rs.30 கூடியதால் அந்த அளவு லாபம் குறைந்துவிட்டது. ஆக இரண்டாம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் செலவுகள் கூடி லாபத்தை குறைத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிறுவனத்தால் செலவை கட்டுப்படுத்த முடியவில்லை, விற்பனையை மட்டும் கூட்டினால் போதாது, விற்கும் பணத்தை செலவுகளை கட்டுக்குள் வைத்து லாபமாக மாற்ற இந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பதால், இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் நம் முதலீடு எப்படி வளரும்?? ஆக லாப விகிதத்தை operating Profit ஐ முதலில் கவனிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல், மூன்று முதல் ஐந்து ஆண்டு லாப நஷ்ட கணக்கை கவனிக்க வேண்டும்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, வரிசை எண் 10 இல் இருக்கும் Extra-ordinary items. சில நிறுவனங்களில் லாப நஷ்ட கணக்கில் இது இருக்கும். முதலில் Extra-ordinary items என்றால் என்ன என்று பார்போம். நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டின் மூலம் சம்பாதிக்காத வேறு விதமான வருமானங்களை Other Income என்னும் வரிசை எண் 4 இல் சேர்க்கலாம். உதாரணமாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் தன்னிடம் இருக்கும் உபரி ரொக்க பணத்தை வங்கியில் Deposit செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி, Other Income இல் சேரும். ஆனால் ஒரு நிறுவனம் தன்னிடம் இருந்த ஒரு தொழிற்கூடத்தை அல்லது தன்னிடம் இருந்த தொழிலில் ஒரு பகுதியை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் Extra-ordinary items ஆக கருதப்படும். வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி வருடா வருடம் கிடைக்க கூடியது, ஆனால் பிற இரண்டும் அப்படி இல்லை. ஒரு முறை மட்டுமே நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இன்னொரு உதாரணம் நிறுவனம் தொழில் விஷயமாக வேறு யார் மேலாவது வழக்கு போட்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து அந்த தீர்ப்பின் மூலம் கிடைக்கும் நஷ்டஈடு Extra-ordinary items இல் வருமானமாக கருதப்படும். அதே போல் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்தால் அதுவும் Extra-ordinary items இல் செலவாக கருதப்படும். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், Other Income வேறு Extra-ordinary items வேறு என்பது. Other Income என்பது நிறுவனம் செய்யும் தொழில் சார்ந்த இதர வருமானங்கள். Extra-ordinary items எதேச்சையான, வருடா வருடம் நடக்காத ஒரு விஷயத்தால் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம்.
Year 1
1. Sales 200
2. Operating Expenses 160
3. Operating Profit (1-2) 40
Extra-ordinary Income - Net Profit 40
Year 2
1. Sales 400
2. Operating Expenses 420
3. Operating Profit (1-2) (20)
Extra-ordinary Income 120
Net Profit 100
இந்த உதாரணத்தில், நிகர லாபம் (Net Profit) இரண்டாம் ஆண்டில் நன்கு கூடி இருக்கிறது. நிகர லாபத்தை மட்டும் பார்த்தால் நிறுவனம் மிக நன்றாக செயல்பட்டு லாபம் சம்பாதிப்பது போல் தெரியும். விற்பனை முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் இரண்டு மடங்காக ஆகி இருக்கிறது, ஆனால் நிகர லாபம் (Net Profit) இரண்டு மடங்குக்கு மேல் இருக்கிறது, இது மிக நல்ல நிறுவனம் என்று முடிவு செய்யத்தோன்றும். முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியது Extra-ordinary items. இதில் Extra-Ordinary Income என்று ஒரு (line Item) Rs.120 இருக்கிறது. நிகர லாபம் Rs.100. இதிலிருந்து Extra-Ordinary Income ஆன Rs.120 ஐ கழித்தால் மிஞ்சுவது Rs.20 நஷ்டம்...!!! ஆக முதலாண்டை விட இரண்டாமாண்டு இந்த நிறுவனம் செயல்பாடு மோசமாகி, நஷ்டத்தில் இருக்கிறது, எனவே இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்வது சரி அல்ல என்று நாம் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் Extra-Ordinary items என்பது வருடா வருடம் கிடைக்கப்போதும் லாபம் அல்லவே. (Extra-Ordinary items இல் நஷ்டம் இருந்தாலும், அதை விலக்கி விட்டு அதன் பிறகே நிறுவனத்தின் செயல்பாடு பற்றி முடிவு செய்ய வேண்டும்)
நிறுவனங்களில் லாபநஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை எங்கே கிடைக்கும்? எப்படி பார்ப்பது என்று யோசிப்பவர்கள் கீழே இருக்கும் வலைத்தளங்களில் நுழைந்தால் தேவையான விபரங்கள் அனைத்தும் கிடைக்கும்,

லாப நஷ்ட கணக்குகளில் மேலும் கவனிக்க வேண்டியவைகள்

சென்ற பக்கத்தில் லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றை பார்த்தோம். குறிப்பாக Operating Profit, Other Income மற்றும் Extra-ordinary Items பற்றி பார்த்தோம். இது மட்டுமில்லாமல் விற்பனை வருடா வருடம் கூட வேண்டும் என்றும் பார்த்தோம். அதேமாதிரி விற்பனை மட்டும் கூடினால் போதாது, அப்படி கூடும் விற்பனை லாபத்தையும் கூட்ட வேண்டும் என்றும் பார்தோம். இனி இந்த பக்கத்தில் வேறு என்னென்ன கவனிக்க வேண்டும் என்று பார்போம்.
லாபநஷ்ட கணக்கில் வட்டி (Interest) என்று ஒரு line item இருக்கும் (வரிசை என் 6-ல் உள்ளது : பார்க்க பாகம் 4). இது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு பணம் வட்டி செலுத்தியிருக்கிறது என்பதை குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் தொழில் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம், கிட்டத்தட்ட கடன் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆக கடன் இருந்தால் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் குறைந்த அளவு வட்டி செலவு செய்திருக்கலாம், வேறுசில நிறுவனங்களோ சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டிக்கே செலவிடலாம். நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தபட்சம் மூன்று வருட லாபநஷ்ட கணக்கை நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு வருடமும் வட்டிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்தியிருக்கிறது என்று பொருள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்.
கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனம் பணத்தை இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யலாம். ஒன்று நல்ல லாபம் சம்பாதித்து லாபத்தில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்திருக்கலாம் அல்லது புதிதாக பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடன்களை திருப்பி செலுத்தி இருக்கலாம். புதிதாக பங்குகளை வெளியிடாமல் (லாபத்தின் மூலம்) கடன்களை திருப்பி செலுத்தும் அளவு இந்த நிறுவனத்திடம் பணம் இருந்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் நடக்கிறது என்று அர்த்தம். நிச்சயமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் முதலீடு நன்கு வளரும் என்று நம்பலாம். (இதை மட்டுமே வைத்து முதலீடு செய்து விடக்கூடாது... முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான அம்சங்களில் இதுவும் ஒன்று.) புதிதாக பங்குகளை வெளியிட்டு கடன்களை அடைத்திருக்கிறது என்றால் அதன் சாதக பாதகங்களை வரும் பதிவுகளில் கவனிப்போம்.
சில நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கும் ஆனால் சம்பாதித்த லாபத்தில் பெரும்பகுதி வட்டிக்கு செலவாகி இருக்கும். இப்படி லாபத்தில் பெரும்பகுதியை வட்டி செலுத்த செலவிட்டால், முதலீடு செய்தவர்களுக்கு என்ன மிஞ்சும்? அல்லது முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தில் விகிதம் குறையத்தானே செய்யும்? அதனால் அதிக வட்டி செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ரொம்ப யோசித்து முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சுபிக்க்ஷா சிக்கலில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. அதற்கு சுபிக்க்ஷாவின் கடனும் ஒரு முக்கிய காரணம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் வட்டிக்கு செலவிட்டு, நடப்பு முதலீடு என்று சொல்லப்படும் அன்றாட தேவைக்கான Working Capital-ல் பாதிப்பு வந்து சுபிக்க்ஷா இன்று மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. ஆக அளவுக்கதிகமான வட்டி ஒரு எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில நிறுவனங்கள் தொழில் விருத்தி செய்ய புதிதாக கடன் வாங்கியிருக்கும். அதாவது புதிதாக ஒரு தொழிற்கூடம் அமைக்க கடன் வாங்கியிருக்கலாம். தொழிற்கூடம் என்பதை ஒரு நாளில் கட்டி முடித்து அடுத்த நாளே உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்துவிட முடியாது. நிறுவனம் இருக்கும் தொழிலை பொறுத்து கட்டுமானத்திற்கான காலம் ஆறு மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். அதற்கு பிறகுதான் புதிய தொழிற்கூடம் உற்பத்தி ஆரம்பித்து விற்பனை கூடி அதன்மோலம் லாபமும் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்பும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும் - விற்பனை கூடி இருக்காது. இது நஷ்டதிற்கோ அல்லது குறைந்த நிகர லாபத்திற்கோ வழிவகுக்கலாம். எனவே வட்டி கூடியிருக்கிறது என்றதும், நிறுவனம் மோசம் என்று முடிவு செய்து விடாமல், நிறுவனம் சம்மந்தப்பட்ட செய்திகளை படித்துப்பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம். எங்கே தகவல் கிடைக்கும்? அனைத்து நிறுவனங்களும் தமது தொழில் சம்மந்தப்பட்ட தகவல்களை பங்குசந்தைக்கு கொடுக்க வேண்டும். அதனால் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்க்கலாம்.
ஆக விற்பனை கூடி இருக்க வேண்டும், Operating Profit கூடி இருக்க வேண்டும், Extra-ordinary Items பற்றி கவனிக்க வேண்டும், வட்டி செலவை கவனிக்க வேண்டும். லாபநஷ்ட கணக்கு என்பது இதை எல்லாம் கடந்துதான் நிகர லாபம் என்ற நிலையை அடைகிறது. நிகர லாபம் விற்பனையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டு விற்பனை 1,000 ரூபாயாக இருந்து நிகர லாபம் (Net Profit) 200 ரூபாய இருந்தால் நிகர லாபம் (Net Profit Ratio) 20 சதவிகிதம் என்று சொல்கிறோம் (200/1000x100). ஒவ்வொரு வருடமும் இந்த Net Profit Ratio என்பது கொஞ்சமாவது கூட வேண்டும். கூடாவிட்டாலும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நிகர லாபம்தான் முதலீட்டளர்களுக்கான லாபம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தான் முதலீட்டளர்களுக்கு நிறுவனம் Dividend என்ற பெயரில் வருடா வருடம் கொடுக்கும். மேலும் ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு நிறுவங்களின் Net Profit Ratio-வை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எந்த நிறுவனத்தின் Ratio அதிகமோ அந்த நிறுவனம் நன்றாக இயங்குகிறது என்று முடிவுக்கு வரலாம். இந்த ஒப்பீடு ஒரு வருடத்தை மட்டும் வைத்து செய்யாமல் குறைந்தபட்சம் 2 நிறுவனங்களின் 2 ஆண்டு கணக்கை வைத்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஒப்பிடுதல் (Comparison), Ratio கணக்கிடுதல் இவையெல்லாம் நிறுவனத்தின் லாபம் சம்பாதிக்கும் திறனை நாம் உணர்ந்துகொள்ள உதவும்.
இனி லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பகுதிக்கு நாம் வருகிறோம். அதுதான் EPS என்ற Earning Per Share என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஒரு பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சொல். EPS பற்றி பேச நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் EPS பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.
அதற்குமுன் இதை படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு பங்கு வாங்குமுன் இவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டுமா என்று தோணலாம். பங்கு சந்தை முதலீடு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் நமக்கு வருமானத்தை கொடுக்கும். அதனால் அடிப்படையில் நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வருமானம் பார்க்க அதிக வாய்ப்பு உண்டு. நண்பர் திரு.சதுக்கபூதம் அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தை கொடுத்திருந்தார்.
//தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்//
மேற்கண்ட முன்னூட்டம் இன்றைய சில தரகர்கள் மற்றும் சிலரின் தவறான நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (அனைத்து தரகர்களுமே தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது). இந்த மாதிரி தவறான வழிகாட்டுதல்களை தவிர்க்க, நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க நாம் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும். லாபம் சம்பாதிப்பதுதான் பங்கு சந்தை முதலீட்டின் ஒரே குறிக்கோள் என்றாலும், அதைவிட முக்கியமாக முதலீடு அழிந்து போகாமல் இருக்க வேண்டுமே...!!! அதற்க்காக இப்படி நிறைய விஷயங்களை அலசி பார்த்து, அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களின் (Fundamentally Strong Companies) பங்குகளை வாங்கினோமானால் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். எனவே நாம் ஏற்கனவே கூறிய விஷயங்களை எல்லாம் கவனித்தே ஆகவேண்டும்.